Tuesday, December 29, 2015

இந்த ஜென்மத்தின் புனித முத்தத்திற்காய்


முத்தத்தின் பின் உதிர்ந்து போன அன்பின் உரு இருண்ட வீதிகளில் இருக்க கூடுமா?
விழும் துளியிடையே உருகி மருகி பெரும் விடமாய் என்னுள் இறங்குகிறாய்
கலைந்த ஆட்காட்டியின் குரலும்
மூன்றுவேட்டை நாய்களின் தேடலும் நிரம்பியது அந்த நிமிடம்
உயர்ந்த கோபுரத்தில் கண் நிறுத்தி கைபற்றிய வேளை கடந்து செல்வதற்கென ஏதும் இருக்கவில்லை.
தூரத்து கானல் நீரில் விழுந்த உன் விம்பம் 
எழுந்தது என்னவோ என்னில் தான்
இப்போது இருளைக் கிழித்து நானும் நடை போடுகிறேன்
மறுமுறை மழைத்துளி விழுகையில் மகிழ்ந்திரு என கூறி மரித்துப் போகலாம் வா பேரன்பே....! Mathusha 

Thursday, November 5, 2015

இவள் ....?

எங்கோ அலைந்த என் சாவின்வாடை என்னை நிரப்புகிறது
கனவுக்குள் -கனவின் கனவுக்குள்
அதன் முடிவிலிகளில் எங்கும் என் பிணவாடை
பற்றி எரியும் என் தேகத்தின் ஊன் வாடை

கதறும் காக்கையில் ஒலி
அலறும் ஆந்தையின் ஓலம்
மரணத்தின் அர்த்தம் நிரம்பிர அறிகுறிகள்

உதறும் தேகம் எங்கும் சிதைகிறது என் கனவு
என் பெரும் காதலே நீயும் சிதைந்து போ
என் பிரிய மகளே நீயும்.....
இந்த குருட்டு கவிதைகாரியின் வெளிச்ச மொழிகளே
நீங்களும் சிதைந்து போங்கள்
மொழிகள் அற்ற தேசத்தில் இவள் வெட்கிச் சாகட்டும்.


-Mathusha-

இனி....?

இப்போதெல்லாம் 
உன் கதகதப்பற்ற போர்வையை தான் பரிசளிக்கிறாய்
உதறும் படுக்கை விரிப்பில் சிதறி விழும் நம் தலைமுடிகளை ஏன் தர மறுக்கிறாய்.
நம் எச்சில் கலவாத் தேனீர் விஷமாகி விழுங்குகிறது என்னை
கழுத்தில் வடியும் குளித்த நீர், நீயின்றி
உலர்வதேயில்லை...
இத் தனிமையின் கண் குறுமணல் நிரம்பிய பாலைவனம்
இப்போது கரகரக்க ஆரம்பித்திருக்கிறது
இனி....?


- Mathusha-

நெடுங் காதலாவோம்

நம் முதல் பொழுதின் வண்ணம் இந்த சுவரெங்கும் கசிகிறது.
நெருங்கி வந்து அணைத்த பொழுதுகளில் சிந்திய வண்ணங்கள் நம் தேனீராய்......!
உன் ஒவ்வொரு ஸ்பரிசத்தின் வண்ணம் என் கைரேகையாக...!
கோபத்தின் வண்ணத்தை உன் குறும் தாடிக்குளேயே பதுக்கி வை
முத்தத்தின் வண்ணம் - அது தீரா வேண்டாம்
வியர்வையின் வண்ணம், அதை கொடு ஒரு உயிர் வரையவேண்டும்
இறுதியாய் நம் காதலின் வண்ணம் கண்டு நாம் நெடுங் காதலாவோம்


- Mathusha- 

நினைவு ஒரு கவிதை

கிடைத்த அன்பை எல்லாம் ஒற்றை முத்தமாக்கி 
பிச்சு என் காலங்களின் இடையே வைத்திருகிறேன்
எப்போதாவது அவை குட்டி போட்டு உன்னிட வந்து சேரும்
அதன் பின் நீ அன்பாய் உருக்கொண்டிருப்பாய்

heart emoticon heart emoticon heart emoticon


இருள் கவியும் தருணத்தில் சிறுதணலாய் வந்து இருள் தின்கிறாய்
பின்பெரும் சுடராய் எழுந்து காதலால் எனை வரைகிறாய்

heart emoticon heart emoticon heart emoticon

இனியும் என் பாடலின் இசை நீயாய் இருப்பதை யாரும் உணரப்போவது இல்லை

என் சொற்களின் ஆத்மா நீ எனில் யாரும் ஏற்கப்போவதும் இல்லை.
இது பிரிதலின் காலம்
எனில் ஏன் இணைந்தோம்?

heart emoticon heart emoticon heart emoticon

இலை வழியும் இறுதி துளியில் சொட்டிக் கொண்டிருக்கின்றது 

உன் நினைவு

- Mathusha- 

நம் நினைவின் ப்ரியங்கள் முடிவதே இல்லை.

எனை நிரப்பும் ஆன்ம பிரவாகமே
விழுந்து கொண்டிருகும் மழைத்துளியின் ஒற்றை உயிர் நான்
கசிந்து கொண்டிக்கும் ஈரலிப்புகளில் பற்றிப் படர்கிறது 
நாம் எனும் பெரும் கனவு
உலர்ந்த எம் பிரியங்களை கனவு கடந்து செல்லட்டும்

மழை கால அலைகளாய் ஆர்ப்பரிக்கும் நினைவுகளை
இறந்தும் உடையாச் சங்குகளில் நிரப்பி
இதோ
இங்கே தான் விட்டிருக்கிறேன்
இந்த நினைவின் ப்ரியங்கள் நுரையில் குழைந்து, அலையில் கரைந்து கடல் எங்கும் வியாபிக்கும்
இப்பரந்த உலகு இனி நினைவுவின் ப்ரியமே
பேரன்பே
முடியவிருக்கும் நாட்கள் குறித்து வருந்தாதே
நம் நினைவின் ப்ரியங்கள் முடிவதே இல்லை
.


- Mathusha- 

இப்போது முத்தமிடு

ப்ரியனே
கனவுகளின் நீட்சியின் முடிவுறா விம்ப நிழலில் என்னை நீ தேடாதே
பெயரறிய சிறு பூச்சியின் குரலும்
உரசும் இந்த உப்புக் காற்றும்
நாளை தனித்தே இயங்குவது நலம்
உன் இரு கர இடைவெளி நிறைந்து
உயிர் நனைத்த
ஒற்றை மானிட பிரவாகம் நான்
இவ்விரவு எங்கும் நிறைந்திருக்கும் நம் நேசத்தை நாளைய மழையில் கரைத்து விடு
சாயமிழந்த தூரத்து வெள்ளி ஒன்று இப்போது தான் உதிர்ந்து போயிற்று
சகி என அழை
இரு கரம் தொட்டு இறுக அணை
இப்போது முத்தமிடு
நான் பெருமழையாகிறேன்
இனி இத்தேசம் எங்கும் பொழிவேன்